Search This Blog

Tuesday, 7 June 2011

தடுப்பு மருந்துகள் விலைக் குறைப்பு



உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஏழை நாடுகளில் விற்கப்படுகின்ற தம்முடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றின் விலையில் பெரிய அளவிலான குறைப்புகளை அறிவித்துள்ளன. டயரியா எனப்படும் வயிற்றோட்டம், நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்பு, காசநோய் மற்றும் வேறு பல நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்படுகின்றன. உலகில் இப்படியான கொடிய நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்துள்ள

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்ற தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துளுக்கான உலகக் கூட்டமைப்பான GAVI (Global Alliance for Vaccines and Immunisation) தனது இலக்குகளை எட்ட இந்த விலைக் குறைப்பு உதவும். தடுப்பூசி போட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது மாதிரியான நோய்களால் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தைந்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இல்லாதப்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதிலுள்ள மிகப் பெரிய தடை - அந்த தடுப்பு மருந்துகளில் கூடுதலான விலைகள்தான். இவ்வகையான தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகள் கூட்டாக வாங்கி பகிர்ந்துகொள்வதில் ஒருங்கிணைப்பு பணி ஆற்றிவருகின்ற GAVI அமைப்பு மூவாயிரத்து எழுநூறு கோடி டாலர்கள் நிதி பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. இப்படியான ஒரு சூழ்கவிில், தடுப்பு மருந்துகளுக்கு மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற விலையை GAVI  அமைப்பு கொடுப்பதென்பது சாத்தியம்அல்ல.

தற்போது பல பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றை ஏழை நாடுகளுக்கு தாம் விற்றுவருகின்ற
விலையில் பெரிய அளவில் குறைப்புகளைச் செய்துள்ளன. GAVI அமைப்பின் மூலமாக விற்கப்படுகின்ற மருந்துகளின் விலைகளைக் குறைப்பதாக கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ள ரோட்டாவைரஸ் என்ற வயிற்றுப் போக்கை உண்டாக்கும் கிருமிக்கான தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கு விற்றுவரப்படுகின்ற விலையில் 67 சதவீதம் குறைக்கப்படுவதாக கிளாக்ஸோ
அறிவித்துள்ளது.

செல்வந்த நாடுகளில் இந்த மருந்துகளின் விலையை ஏற்றுவதன் மூலம் ஏழை நாடுகளுக்கு இந்த மருந்துகள் விலை குறைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஏழை நாடுகளில் இனி இரண்டரை டாலருக்கு விற்கப்படவுள்ள இந்த ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்து அமெரிக்கா போன்ற ஒரு செல்வந்த நாட்டில் இனி ஐம்பது டாலர்களுக்கு விற்கப்படும். டிப்திரியா அதாவது தொண்டையடைப்பான், டெட்டனஸ் எனப்படும் நரம்பிழுப்பு நோய் , பெர்டஸ்ஸிஸ் அதாவது கக்குவான் இருமல், ஹெப்பாடிடிஸ் பி அதாவது மஞ்சள் காமாலை நோய். ஹீமோஃபீலஸ் இன்ஃபுலுவென்ஸா பி எனப்படும் இரத்தக் காய்ச்சல் போன்ற ஐந்து நோய்களுக்குமான தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பதாக சீரம் இண்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இந்திய நிறுவனங்களும் சம்மதித்துள்ளன.தடுப்பு மருந்துகளின் விலைக் குறைப்பை வறுமை ஒழிப்பு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் மற்ற மற்ற நிறுவனங்களும் விலைக்குறைப்புகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் நாற்பது லட்சம் குழந்தைகளின் உயிர்களை தடுப்பூசிகள் மூலம் காப்பாற்றுவது என்ற GAVI அமைப்பின் இலட்சியம் மெய்ப்பட வேண்டுமானால், வரும் 13 லண்டனில் நடக்கவுள்ள தடுப்பு மருந்து நிதி உதவிகள் தொடர்பிலான மாநாட்டில் கொடையாளி நாடுகள் கூடுதலாக நிதி வழங்க முன்வர வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...