Search This Blog
Saturday 18 June 2011
மன அழுத்தத்தை குறைக்க செடி, கொடி வளர்க்கலாம்
லண்டன் : அலுவலக வேலை பளு காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட, உங்கள் மேஜை மீது ஒரு சிறிய தொட்டியில் செடியை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.
நார்வேஜியன் யுனிவர்சிட்டி ஆப் லைப் சயின்ஸ் சுற்றுச்சூழல் உளவியல் நிபுணர் பிரிங்லிமார்க் தலைமையிலான குழுவினர், ஸ்வீடனின் உப்சலா யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்களுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஓரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் விவரம்:
அலுவலக அறைகளில் செடி வளர்க்கப்படுகிறதா? ஊழியர்கள் உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பில் செல்கிறார்களா? என்பது குறித்து 385 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. செடிகளுக்கும் ஊழியர்களின் மன உளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதாவது, அலுவலக அறையில் செடிகள் இருக்கின்ற பட்சத்தில், ஊழியர்கள் அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக லீவு எடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அலுவலகங்களில் ஆங்காங்கே தொட்டிகளில் செடியை வளர்க்கும்போது, ஊழியர்களுக்கு மன அழுத்தம், தொண்டை வறட்சி, தலைவலி, இருமல் மற்றும் தோல் வறட்சி ஆகிய பாதிப்புகள் குறைவாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.பொதுவாக பச்சைப் பசேல் என்ற செடி, கொடிகளை பார்ப்பதால் மனம் உற்சாகம் அடையும். நோய் குணமடைவதற்கும் இவை உதவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, அலுவலக பணி என்பது மூளை சம்பந்தப்பட்டது. அதிக வேலை பளு காரணமாக மூளை சோர்வடையும். இதைப் போக்குவதற்கு ஏற்றாற்போல் அலுவலகம் இயற்கை சூழலில் அமைய வேண்டும். அதை ஜன்னல் வழியே பார்ப்பதற்கு வழிவகை செய்யலாம். முடியாதபட்சத்தில், அலுவலக அறைக்குள்ளேயே தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம் என பிரிங்ஸ்லிமார்க் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment