Search This Blog

Sunday 22 May 2011

எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் மனிதன்


 
உலக எய்ட்ஸ் தினத்தன்று ஒரு மருத்துவ அதிசயம்! “பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்!

கூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு” என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!
 “மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்!

சிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது!!

டைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...